ஆட்டோவில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது
ஆட்டோவில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள காட்ராம்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி நீலாம்பரி (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக முக்கண்ணாமலைப்பட்டி அருகே உள்ள குளவாய்ப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று நீலாம்பரிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய உறவினர் ஒருவர், அந்த பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது ஊராட்சி மன்ற அலுவலக பகுதியில் ஆட்டோ வந்தபோது அந்த பெண்ணுக்கு பிரசவவலி அதிகமானதையடுத்து அவருக்கு ஓடும் ஆட்டோவிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் உடனடியாக தாயும், சேயும் முக்கண்ணாமலைப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களை பரிசோதனை செய்த அரசு மருத்துவர் ஆசிக் அசன்முகமது தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.