மண்ணில் புரண்டு விளையாடிய குட்டி யானை


மண்ணில் புரண்டு விளையாடிய குட்டி யானை
x

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் கிடந்த மண்ணில் குட்டி யானை புரண்டு விளையாட்டியது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் கிடந்த மண்ணில் குட்டி யானை புரண்டு விளையாட்டியது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

பலாப்பழ சீசன்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் பலாப்பழ சீசன் தொடங்கும். அதன்படி குன்னூர் பகுதியில் தற்போது பாலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பர்லியார் முதல் காட்டேரி வரை சாலையோரத்தில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்த்து தொங்குகின்றன.

பலாப்பழங்கள் யானைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். இதனால் சமவெளியில் இருந்த வந்த காட்டு யானைகள் குன்னூர் பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருகின்றன.

சாலையில் உலா வந்த காட்டு யானைகள்

இவ்வாறு வரும் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமவெளியில் இருந்து குட்டியுடன் வந்த 7 காட்டு யானைகள் மரப்பாலம் அருகே குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வந்தன. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவுக்கு முன்பதாகவே வாகனங்களை நிறுத்தினர். சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மண்ணில் விளையாடிய குட்டியானை

தொடர்ந்து சாலையில் உலா வந்த காட்டு யானைகள் சிறிது நேரத்திற்கு பிறகு வனப்பகுதிக்குள் செல்ல முயன்றன. அப்போது, குட்டியானை ஒன்று சாலையோரத்தில் கிடந்த மண்ணில் புரண்டு விளையாடியது. இதனை அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இயைடுத்து அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து போக்குவரத்து சீரானது.

சிலர் இந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.

வனத்துறையினர் எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பலாப்பழங்களை ருசிக்கவரும் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். சாலையோரம் நிற்கும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் தொந்தரவு செய்யக்கூடாது.

வனவிலங்குகளின் அருகில் சென்று புகைப்படம், செல்பி எடுப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story