கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு தொடங்க வேண்டும்


கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு தொடங்க வேண்டும்
x

பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தி உள்ளார்.

திருப்பத்தூர்

சிறப்பு முகாம்

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கான ஆதார் எண் இணைப்பதற்காக அஞ்சல் துறை சார்பில் திருப்பத்தூர் ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்து, பள்ளி மாணவிகளுக்கு அஞ்சல் வங்கி கணக்கு தொடங்கப்பட்டதற்கான ஸ்மார்ட் அட்டைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கின்ற ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர் கிறிஸ்த்தவ இன மாணவ, மாணவிகளுக்கு 2022-2023-ம் கல்வி யாண்டில் கல்வி உதவித்தொகை புதிய மென்பொருளை கொண்டு ஆன்லைன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வங்கி கணக்கு

இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 3,650 பேரின் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு இல்லாத மாணவர்களின் நலன் கருதி கடந்த 20 நாட்களாக பல பள்ளிகளில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் எந்த ஒரு செலவும் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்கும் பணிகள் நடைபெற்று பருகிறது. தற்போது வரை மிகவும் குறைவான கணக்குகளே தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட பள்ளியில் ஒரு பொறுப்பாசிரியரை நியமனம் செய்து அவரது பாதுகாப்பில் மாணவர்களது பெற்றோருடன் தொடர்புடைய வங்கிக் கிளைக்கு சென்றோ அல்லது இது போன்ற சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டோ அல்லது அருகாமையில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்கு சென்றோ வங்கி கணக்கினை தொடங்கி பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயக்குமார், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் தனராஜ், அஞ்சல் துறை அலுவலர் முகேஸ், உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story