லாரி மீது கார் மோதி வங்கி ஊழியர் பலி


லாரி மீது கார் மோதி வங்கி ஊழியர் பலி
x

ஆம்பூர் அருகே கார்மீது லாரி மோதிய விபத்தில் வங்கி ஊழியர் பலியானார். மனைவி உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

லாரிமீது கார் மோதல்

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நிலேஸ் (வயது 40). இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபூர்வா (35). விடுமுறை நாளான நேற்று இவர்கள் இருவரும் ஏலகிரி மலைக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர். சென்னை பகுதியை சேர்ந்த ஹரிஷ் (23) என்பவர் காரை ஓட்டி வந்தார்.

கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை நெருங்கிக்கொண்டிருந்தது. மாதனூர் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னாள் சென்ற லாரி மீது மோதி லாரிக்கு அடியில் புகுந்தது.

வங்கி ஊழியர் பலி

இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. நிலேஸ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் ஹரிஷ் படுகாயம் அடைந்தார். அபூர்வா லேசான காயத்துடன் தப்பினார்.

அந்த வழியாக சென்றவர்கள் ஹரிசை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story