வாடிக்கையாளரிடம் அலட்சியமாக பேசிய வங்கி மேலாளர்
வடமதுரை அருகே வாடிக்கையாளரிடம் அலட்சியமாக வங்கி மேலாளர் பேசிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடமதுரை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் உமாபதி (வயது 45). இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் இவர், புதிய ஏ.டி.எம். கார்டு மற்றும் கணக்கு புத்தகம் பெறுவதற்கு வங்கியில் பணம் செலுத்தினார். இந்நிலையில் ஒரு மாதம் ஆன நிலையில் ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்கு புத்தகம் கிடைக்காததால் நேற்று அவர் வங்கிக்கு சென்று மேலாளரிடம் இதுகுறித்து கேட்டார்.
அப்போது வங்கி மேலாளர் உங்கள் வேலை பொறுமையாக தான் நடக்கும். காத்திருக்க முடிந்தால் காத்திருங்கள் இல்லை என்றால் போய்விட்டு அடுத்த வாரம் வாருங்கள் என்று கூறினார். அப்போது உமாபதி தான் கோவையில் வேலை செய்கிறேன், இதற்காகவே விடுமுறை எடுத்து வங்கிக்கு வந்துள்ளேன். எனவே ஏ.டி.எம் கார்டு மற்றும் கணக்கு புத்தகத்தை தாருங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு மேலாளர் நீங்கள் கூகுள்-பே, போன்-பே மூலம் எல்லா பணத்தையும் எடுத்து விட்டீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரியுமா? என்று கேட்டுள்ளார்.
அதற்கு வங்கி கணக்கு மூலமாக அதிகமான பண பரிமாற்றம் செய்து உள்ளேன் அவர் என்று கூறியுள்ளார். உங்கள் கணக்கில் ஒரு பைசா மட்டுமே உள்ளது. அதை வைத்து எப்படி வங்கியை நடத்த முடியும். குறைந்தபட்சம் ரூபாய் 500 வைக்க முடியாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஏ.டி.எம்.கார்டு. காசே இல்லாத கணக்கிற்கு ஏ.டி.எம். கார்டு என்ன அவசரம்? நான் சொல்வது புரியவில்லையா, எத்தனை முறை சொல்வது என்று அலட்சியமாக பேசியுள்ளார். இதை உமாபதி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.