மக்கள் எதிர்ப்பை மீறி திறந்த மதுக்கடையை இழுத்து மூட வேண்டும்
தேனி அல்லிநகரத்தில் மக்கள் எதிர்ப்பை மீறி திறந்த மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் என்று கலெக்டரிடம், சமத்துவ மக்கள் கட்சியினர் மனு கொடுத்தனர்.
மதுக்கடையை மூட வேண்டும்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முரளிதரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் அரசுபாண்டி மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அதில், "தேனி அல்லிநகரத்தில் நெடுஞ்சாலையோரம் செயல்பட்ட டாஸ்மாக் மதுக்கடை மக்களின் எதிர்ப்பால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டது. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. பல்வேறு விபத்துகள், சாதி மோதல்கள் உருவாகும் என்பதை தெரிந்தே இந்த மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மதுக்கடையை இழுத்து மூட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
108 ஆம்புலன்ஸ் சேவை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல் கொடுத்த மனுவில், "தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை இரவு நேரங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பல இடங்களில் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆம்புலன்ஸ்களை பகல், இரவு நேரங்களில் முழுமையாக இயக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.
வனவேங்கைகள் கட்சி மாவட்ட பொருளாளர் செந்தில் தலைமையில் குறவர் இன மக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "தமிழகத்தில் நரிக்குறவர் என்ற சாதி பெயரில் குறவர் என்பதை நீக்க வேண்டும். வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் சாதியுடன் குறவர் என்று இணைத்து அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இதேபோல் வடபுதுப்பட்டியில் பஞ்சமி நிலத்தை அபகரித்தவர்கள் மீதும், பஞ்சமி நிலம் மீட்பு என்ற பெயரில் மக்களை ஏமாற்ற திட்டமிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சிலர் மனு கொடுத்தனர்.