அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி வாகனம்


அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி வாகனம்
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது.

வேலூர்

காத்திருப்பு

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக வரும் முதியவர்கள், மற்றும் நடக்க முடியாத நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் உட்கார வைத்தும், படுக்க வைத்தும் அழைத்து செல்கின்றனர்.

ஊழியர்கள் இல்லாத நேரத்தில் புற நோயாளிகள் பிரிவில் நடக்க முடியாத நோயாளிகள் மற்றும் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

பேட்டரி வாகனம்

நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலையை தடுக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நோயாளிகள் அமர்ந்து செல்வதோடு, உட்கார முடியாத நோயாளிகளை படுக்கவைத்து அழைத்து செல்ல படுக்கையும் உள்ளது.

அனுபவமிக்க ஓட்டுனர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் இந்த பேட்டரி வாகனம் இயக்கப்படுகிறது. சத்தம் இல்லாமல் செல்லும் இந்த பேட்டரி வாகனம் மூலம் நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கும் மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விடப்படுகிறது.

இந்த வாகனத்தின் மேற்பகுதியில், ஆம்புலன்சில் உள்ளது போல் சைரனும் உள்ளது. உயிருக்கு போராடும் அல்லது ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அழைத்து செல்லும் பொழுது இந்த சைரன் ஒலிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் நோயாளிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story