தடிக்காரன்கோணம் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயியை கரடி தாக்கியது


தடிக்காரன்கோணம் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயியை கரடி தாக்கியது
x
தினத்தந்தி 4 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தடிக்காரன்கோணம் அருகே கரடி தாக்கி தோட்ட உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

தடிக்காரன்கோணம் அருகே கரடி தாக்கி தோட்ட உரிமையாளர் படுகாயம் அடைந்தார்.

தோட்ட உரிமையாளர்

அழகியபாண்டியபுரம் வனச்சரகத்துக்கு உட்பட்ட தடிக்காரன்கோணம் பிரிவு சாமிகுச்சி பீட் பகுதியில் உள்ள வௌ்ளாம்பி காணி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 52).

இவருக்கு சொந்தமான தோட்டம் வெள்ளாம்பி மலை பகுதியில் உள்ளது. 2 ஏக்கரில் ரப்பர் மரம், பலாப்பழ மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால் மரங்களில் ஏராளமான பலாப்பழம் காய்த்து கிடந்தது.

நேற்று அதிகாலையில் கிருஷ்ணன் அந்த பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 3 கரடிகள் உலா வந்தன. மரத்தில் ஏறி 2 கரடிகள் பலாப்பழத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஒரு கரடி கீழே நின்று கொண்டிருந்தது.

கரடி தாக்கி படுகாயம்

இந்தநிலையில் கிருஷ்ணனை பார்த்த ஒரு கரடி திடீரென அவர் மீது பாய்ந்தது. பின்னர் கால், தொடை பகுதியில் கடித்து குதறியதால் அவர் சத்தம் போட்டார்.

மேலும் கரடியிடம் இருந்து தப்பிக்க போராடினார். இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே சமயத்தில் கிருஷ்ணனின் சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடி வந்து கரடிகளை விரட்டினர். பின்னர் படுகாயம் அடைந்த கிருஷ்ணனை மீட்டு தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி மாவட்ட வன அதிகாரி இளையராஜா கூறுகையில், "முதற்கட்ட விசாரணையில் பலா பழங்களை சாப்பிடுவதற்காக காணி குடியிருப்பு பகுதிக்கு கரடி வந்துள்ளது. கரடி கடித்ததில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணனை வனத்துறை அலுவலர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். மேலும் கரடி வந்த இடத்தில் வனத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காயம் அடைந்த கிருஷ்ணனுக்கு இழப்பீடு தொகை பெற்று தர அரசுக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.


Next Story