சமையலறை கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி


சமையலறை கதவை உடைத்து பொருட்களை சூறையாடிய கரடி
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூரில் அரசு பள்ளியில் புகுந்த கரடி சமையல் அறை கதவை உடைத்து, பொருட்களை சூறையாடியது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

மஞ்சூர்,

மஞ்சூரில் அரசு பள்ளியில் புகுந்த கரடி சமையல் அறை கதவை உடைத்து, பொருட்களை சூறையாடியது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரடி நடமாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி உள்ளிட்ட பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் சில சமயங்களில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஊட்டி அடுத்த மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் கரடி ஒன்று நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் கரடி உலா வருகிறது.

இரவு நேரத்தில் உணவு தேடி கடை வீதிகளில் புகுந்து விடுகிறது. கடந்த வாரம் ஒரு கடைக்குள் கரடி புகுந்து முட்டைகளை குடித்து விட்டு சென்றது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் மஞ்சூர் பஜாருக்குள் கரடி புகுந்தது. பின்னர் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது. அங்கன்வாடி மையத்தை ஒட்டி உள்ள சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது.

பொருட்களை சூறையாடியது

இதைதொடர்ந்து அங்கு இருந்த சமையல் எண்ணெய்யை கரடி குடித்து விட்டு, சமையலுக்கு வைத்திருந்த அத்தியாவசிய பொருட்களை சூறையாடி அட்டகாசம் செய்தது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த பணியாளர்கள், சமையல் அறை கதவு உடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். பள்ளிக்குள் புகுந்த கரடியால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மஞ்சூர் பகுதியில் கரடி நீண்ட நாட்களாக உலா வருகிறது. இரவு நேரத்தில் புதர் பகுதியில் இருந்தால் சரிவர தெரியாது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.


Next Story