குடியிருப்புக்குள் புகுந்து பால், தயிரை ருசித்த கரடி
குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை எடுத்து கரடி ருசித்தது. இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குன்னூர்,
குன்னூரில் குடியிருப்புக்குள் புகுந்து பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை எடுத்து கரடி ருசித்தது. இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பாலை ருசித்த கரடி
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி மற்றும் குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் சில நேரங்களில் வனவிலங்கு-மனித மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் குன்னூர் உபதலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் சரக்கு வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி குடியிருப்பு பகுதியில் நுழைந்த கரடி வேனின் அருகில் வந்து நின்றது. பின்னர் வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை எடுத்து ருசித்தது.
வனத்துறையினர் விசாரணை
இதனால் பால், தயிர் பாக்கெட்டுகள் சிதறி கிடந்தன. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் குடியிருப்புவாசிகள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளை ருசித்து சென்ற கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.