கோத்தகிரியில் உலா வந்த கரடி


தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் உலா வந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியே வரும் கரடிகள் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தொடர்ந்து உலா வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து வெளியே வந்த கரடி, போலீஸ் நிலையம் அருகே உலா வந்ததுடன், அங்கிருந்து குடியிருப்புகள் அதிகமுள்ள கடைவீதி சாலையில் நடமாடியது. கரடியை கண்ட பொதுமக்கள் மற்றும் போலீசார் அச்சமடைந்தனர். பின்னர் புதர் மறைவிற்குள் சென்று மறைந்தது. இதேபோல கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஸ் நிலையத்தில் இருந்து ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் கரடி ஒன்று உலா வந்தது. சற்று நேரம் சாலையிலேயே உலா வந்த கரடி பின்னர் அருகிலிருந்த புதர் மறைவிற்குள் சென்று மறைந்தது. கரடி தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரி வளாகம், குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story