கடையை உடைத்த கரடியால் பரபரப்பு
கேத்தரின் நீர்வீழ்ச்சி அருகே கடையை உடைத்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் 2 கிராமங்கள் உள்ளன. இங்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கேத்தரின் நீர்வீழ்ச்சி வாகன நிறுத்தம் பகுதியில் உள்ள பெட்டிக்கடையின் கதவை கரடி உடைத்தது. பின்னர் உள்ளே புகுந்த கரடி அங்கிருந்த உணவு பொருட்களை தின்று, நாசம் செய்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் கரடிகள் அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுற்றுலா தலமான கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் கரடிகள் தொடர்ந்து உலா வருவதால், அப்பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு கரடிகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விடவோ அல்லது வனப்பகுதிக்குள் விரட்டவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.