பால் பாக்கெட்டுகளை சேதப்படுத்திய கரடி


பால் பாக்கெட்டுகளை சேதப்படுத்திய கரடி
x

குன்னூர் அருகே பால் பாக்கெட்டுகளை சேதப்படுத்திய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் அருகே உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக கரடிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காந்தி நகர் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்தது. அங்கு வீடுகளுக்கு முன்பு நிறுத்தி இருந்த பால் வாகனங்களில் ஏறி, பால் பாக்கெட்டுகளை சேதப்படுத்தியது. மேலும் பாலை ருசித்து சென்றது. நேற்று காலையில் பொதுமக்கள் பார்த்த போது, சாலையில் பால் பாக்கெட்டுகள் சிதறி கிடந்தது. இதனால் பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரடி நடமாட்டத்தால் இரவில் வேலைக்கு சென்று திரும்பும் மக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். எனவே, பொதுமக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் குன்னூர் நகரில் ராஜாஜி நகர் பகுதியில் கரடி புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்த போது, கரடி வேறு பகுதிக்கு சென்றது. சாலையோரங்களில் உணவுக்கழிவுகளை கொட்டக்கூடாது என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.


Next Story