கட்டிலில் தீ விபத்து; முதியவர் பலி
கோத்தகிரி அருகே நெருப்பு மூட்டி தூங்கிய போது கட்டிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதியவர் பலியானார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே நெருப்பு மூட்டி தூங்கிய போது கட்டிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதியவர் பலியானார்.
தீ விபத்து
கோத்தகிரி அருகே முல்லைநகர் இம்பியாடா மட்டத்தை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 73). இவருடைய மனைவி இறந்து விட்டார். இதனால் அவர் தனது பேரனுடன் வசித்து வந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரகம் செயலிழந்து விட்டது. இதனால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்புறம் தகர கொட்டகையில் உள்ள பிளாஸ்டிக் கயிற்றால் ஆன கட்டிலில் தூங்க சென்றார். மேலும் குளிரை போக்குவதற்காக அருகே நெருப்பு மூட்டி வைத்து விட்டு தூங்கினார். அதன் பின்னர் நெருப்பு கட்டிலில் பிடித்து பற்றி எரிந்துள்ளது.
முதியவர் பலி
இதில் சிதம்பரத்துக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதால், வலியால் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து தீயை அணைத்து, அவரை மீட்டனர். அப்போது சிதம்பரம் தீ விபத்தில் உடல் கருகி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிதம்பரத்தின் பேரன் காளிதாஸ் (27) போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.