ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு பீர் பாட்டில் குத்து
மார்த்தாண்டத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை பீர் பாட்டிலால் குத்திய பார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை பீர் பாட்டிலால் குத்திய பார் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
உறவினர்கள்
தக்கலை அருகே உள்ள வலியாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருடைய கணவர் இறந்து விட்டார்.
இதனால், அந்த பெண் தக்கலை பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலைக்கு சென்று வருகிறார். அந்த கடையின் அருகில் உள்ள ஒரு மதுபான பாரில் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஜாண் செல்வகுமார் (42) என்பவர் வேலை செய்து வருகிறார். ஜாண் செல்வகுமாரும், அந்த பெண்ணும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.
ஆசைக்கு இணங்க மறுப்பு
அந்த பெண்ணின் வீட்டிற்கு ஜாண் செல்வகுமார் சென்று சிறு சிறு பிளம்பிங் வேலைகள் செய்து கொடுத்துள்ளார். அதற்கான கூலியை அந்த பெண் கொடுக்க வேண்டியிருந்தது. அதை பலமுறை அவர் கொடுக்க முயன்றபோது, ஜாண் செல்வகுமார் அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார்.
இதற்கிடையே ஜாண் செல்வகுமார் தனது ஆசைக்கு இணங்குமாறு அந்த பெண்ணை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு அவர் மறுத்துவந்ததாக கூறப்படுகிறது.
உடைந்த பாட்டிலால் குத்து
இந்த நிலையில் ஜாண் செல்வகுமார் தனக்கு தரவேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு மார்த்தாண்டம் வெட்டுமணிக்கு வருமாறு அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் பிற்பகலில் பணத்துடன் அந்த பெண் வெட்டுமணிக்கு சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஜாண் செல்வகுமார் வெட்டுமணியில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரியின் பக்கம் உள்ள சிறிய சாலை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பெண் அங்கு சென்றபோது, ஜாண் செல்வகுமார் மோட்டார் சைக்கிளில் உடைத்து மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை திடீரென எடுத்து அவரது முகத்திலும், கையிலும் சரமாரியாக குத்தினார்.
பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
இதில் வலி தாங்க முடியாமல் அந்த பெண் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும், அங்கு உடைந்த பாட்டிலுடன் நின்ற ஜாண் செல்வகுமாரையும் அவர்கள் மடக்கி பிடித்தனர்.
பின்னர், இந்த சம்பவம் பற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஜாண் செல்வகுமாரை கைது செய்தனர். காயமடைந்த பெண்ணை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாண் செல்வகுமாரை கைது செய்தனர்.