கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி
கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பலி
கோத்தகிரி
கோத்தகிரி பாண்டியன் பூங்கா அருகே உள்ள ஒரு குடிநீர் கிணற்றில் காட்டெருமை ஒன்று திடீரென கால் தவறி விழுந்து வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்க்கும் போது காட்டெருமை உயிரிழந்து இருந்தது. இதையடுத்து கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியுடன் காட்டெருமையின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் இறந்த காட்டெருமையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பிறகு, அதே பகுதியில் குழி தோண்டி உடல் புதைக்கப்பட்டது. இதேபோன்று குன்னூர் அருகே மேல் அட்டடி பகுதியில் காட்டெருமை ஒன்று தனது குட்டியுடன் மேய்ச்சலில் ஈடுபட்டது. அப்போது குட்டி, மேடான பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குட்டி, உயிருக்கு போராடியது. இதை கண்ட பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அருகில் தாய் காட்டெருமை நின்றிருந்தது. இதனால் வனத்துறையினரால் குட்டியை மீட்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடி தாய் காட்டெருமையை வனத்துறையினர் விரட்டிவிட்டனர். அதன்பின்னரே குட்டியை மீட்க முடிந்தது. ஆனால் அதற்குள் குட்டி உயிரிழந்து இருந்தது. அந்த குட்டி, பிறந்து 2 மாதங்களே ஆகியிருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் குழி தோண்டி அதே பகுதியில் புதைத்தனர்.