விழுப்புரம் பஸ் நிலையத்தில்தனியார் நிறுவன மேலாளருக்கு அடி- உதைசகோதரர்கள் மீது வழக்கு
விழுப்புரம் பஸ் நிலையத்தில் தனியார் நிறுவன மேலாளரை தாக்கிய சகோதரர்கள்2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகா தென்மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் மகாராஜன் (வயது 47). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி லட்சுமிதேவியும் (45), திருக்கோவிலூர் தாலுகா வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் (37) என்பவரது மனைவி ஆனந்தியும் (36) அக்காள், தங்கை ஆவர். மகாராஜன் தனது மாமனார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வப்போது ஐதராபாத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். சிவப்பிரகாசத்துக்கும் ஆனந்திக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆனந்தி, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நண்பர் ஒருவரின் குழந்தைக்கு நடந்த காதணி விழாவில் பங்கேற்பதற்காக மகாராஜன், கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்துவிட்டு, மீண்டும் ஐதராபாத் புறப்பட சென்னை செல்வதற்காக மகாராஜன் விழுப்புரம் வந்தார். அந்த சமயத்தில் விழுப்புரம் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் அருகே மகாராஜனை சிவப்பிரகாசம், அவரது தம்பி அருண்குமார் (35) ஆகிய இருவரும் சேர்ந்து வழிமறித்தனர். அப்போது சிவப்பிரகாசம், தனது மனைவி என்னுடன் சேர்ந்து வாழாமல் இருப்பதற்கு நீதான் காரணம் என்று மகாராஜனிடம் பிரச்சினை செய்ததுடன், அவரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவப்பிரகாசம், அருண்குமார் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.