புதிய தொழில் முனைவோர்களை கண்டறிய ஊக்குவிப்பு முகாம்


புதிய தொழில் முனைவோர்களை கண்டறிய ஊக்குவிப்பு முகாம்
x

குமரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை கண்டறிய தொழில் ஊக்குவிப்பு முகாம் கிள்ளியூர், தோவாளை பகுதிகளில் வருகிற 15 மற்றும் 22-ந் தேதிகளில் நடக்கிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர்களை கண்டறிய தொழில் ஊக்குவிப்பு முகாம் கிள்ளியூர், தோவாளை பகுதிகளில் வருகிற 15 மற்றும் 22-ந் தேதிகளில் நடக்கிறது.

இதுதொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மானியத்துடன் கடன்

தமிழகத்தை தொழில் வளத்தில் முதன்மை மாநிலமாக மாற்றும் பொருட்டு தொழில் வளம் பெருக்க புதிய தொழில் முனைவோர்களை கண்டறியும் பொருட்டு தொழில் ஊக்குவிப்பு முகாம் வருகிற 15-ந் தேதி கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும், 22-ந் தேதி தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெற உள்ளன. தமிழக அரசு செயல்படுத்தி வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்திற்கு 98 நபர்களுக்கு ரூ.78 லட்சம் மானிய திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் கடன் விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு 35 வயதிற்குள்ளும், சிறப்பு பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வுடன் வயது வரம்பு 45 வயதிற்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பலசரக்கு வியாபாரம், மின்சார பொருட்கள் வியாபாரம், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து வகையான வியாபாரங்களுக்கும் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் வரையுள்ள திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 25 விழுக்காடு மானியம் வழங்கப்படும்.

ரூ.385 லட்சம் மானிய இலக்கு

மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வுடன் எவ்வித கல்வித்தகுதியும் தேவையில்லை. அவர்களுக்கு கூடுதல் மானியமாக 5 விழுக்காடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் கடன் பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். தமிழ்நாடு அரசின் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 39 நபர்களுக்கு ரூ.385 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் ரூ.5 கோடி வரை கடன் பெற பரிந்துரைக்கப்படும். 25 விழுக்காடு முன்முனை மானியமும், 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படும். அதிகபட்ச மானியமாக ரூ.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். கடன் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். வயது வரம்பு பொதுப்பிரிவினர் ஆண்கள் 35 வயதிற்குள்ளும், ஏனைய பிரிவினருக்கு 45 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். ஆதி திராவிடர், தொழில்முனைவோர்க்கு கூடுதலாக 10 விழுக்காடு மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/needs. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்ப பதிவேற்றம்

மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்கு 189 நபர்களுக்கு ரூ.546 லட்சம் மானிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேவை தொழில் திட்ட மதிப்பு ரூ.5 லட்சமும், உற்பத்தி தொழில் திட்ட மதிப்பு ரூ.10 லட்சம் வரையும் கடன் பெற கல்வி தகுதி தேவையில்லை. 8-வது வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைத் தொழில் திட்ட மதிப்பு ரூ.20 லட்சமும், உற்பத்தி தொழில் திட்ட மதிப்பு ரூ.50 லட்சமும் கடன் பெறலாம். கிராமப்புறத்தில் சிறப்பு பிரிவினர் தொழில் தொடங்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சம் 35 சதவீதம் மானியம் பெற வழிவகை உள்ளது. இதில் கடன் பெற www.kviconline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். மேற்படி கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க பாஸ்போர்ட் அளவு நிழற்படம், ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, கல்வித்தகுதி மற்றும் இதர சான்றிதழ் ஆகியவற்றுக்கான அசல் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கூட்ட அரங்கிலேயே விண்ணப்பம் பதிவேற்றம் செய்து வழங்கப்படும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தொழிற்பேட்டை, கோணம் அஞ்சல், நாகர்கோவில் -4 என்ற அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04652-260008 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story