மலேசிய பெண்ணை காதலித்து கரம் பிடித்த ராமநாதபுரம் வாலிபர்


மலேசிய பெண்ணை காதலித்து கரம் பிடித்த ராமநாதபுரம் வாலிபர்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மலேசிய பெண்ணை காதலித்து ராமநாதபுரம் வாலிபர் கரம் பிடித்தார். அவருக்கு தமிழ் கலாசாரப்படி தாலி கட்டினார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மலேசிய பெண்ணை காதலித்து ராமநாதபுரம் வாலிபர் கரம் பிடித்தார். அவருக்கு தமிழ் கலாசாரப்படி தாலி கட்டினார்.

மலேசிய பெண்ணுடன் காதல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளை மடம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி தில்லைவனம். இவர்களது மகன் எம்.அருண்செல்வம். இவர் மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

அதே ஓட்டலில் மலேசியா நாட்டை சேர்ந்த யீ சிவன்-லியாங் ச்விச்யி ஆகியோரது மகள் யீ ஷ்யான்(25) என்பவரும் மேலாளராக வேலை பார்த்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் மலேசிய பெண்ணான யீ ஷ்யானுக்கு தமிழ் கலாசாரம் பிடித்து போனதால் தனது திருமணம் தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார்.

தமிழ் கலாசாரப்படி திருமணம்

இதை தொடர்ந்து இருவரது குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு பச்சை கொடி காண்பித்து விட்டனர். இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காதல் ஜோடி இருவரும் பெற்றோர், உறவினர்களின் ஆசியுடன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். தமிழ் கலாசாரப்படி மணமகன் அருண்செல்வம் வேட்டி சட்டையுடனும் மணமகளான யீ ஷ்யான் சேலை அணிந்தும் மணமேடையில் அமர்ந்தனர். ஓதுவார் தமிழ் கலாசாரப்படி யாகம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஒதி, தாலி சரடு பொருத்தி இருந்த மஞ்சள் கயிற்றை மணமகன் அருண்செல்வத்திடம் வழங்க, அவர் தனது காதலி யீ ஷ்யான் கழுத்தில் அணிவித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு வந்திருந்த பெரியோர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.

இதுகுறித்து மணமகன் அருண் செல்வம் கூறும் போது, கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் காதலித்தோம். எனது மனைவிக்கு தமிழ் கலாசாரம் பிடித்து இருந்தது. தற்போது அவர் விருப்பப்படி திருமணம் நடந்து உள்ளது என்றார்.

வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் சாத்தக்கோன் வலசை ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீரபத்திரன், பிள்ளை மடம் கிராமத் தலைவர் முத்துமாரி கலைச்செல்வி, ராமநாதபுரம் மாவட்ட விவசாய அணி செயலாளர் ஜி.எம்.மாரிமுத்து ஜெயந்தி, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனி மாரி முத்துமாரி, பிள்ளை மடம் கிராம பொருளாளர் களஞ்சியம் முத்துமாரி உள்ளிட்ட பலரும் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை மணமகனின் சகோதரர் பிரபாகரன்-வர்ஷினி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.


Next Story