இலுப்பூர், கீரனூர் அருகே 108 ஆம்புலன்சில் 2 கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது


இலுப்பூர், கீரனூர் அருகே 108 ஆம்புலன்சில் 2 கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது
x

இலுப்பூர், கீரனூர் அருகே 108 ஆம்புலன்சில் 2 கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

நிறைமாத கர்ப்பிணி

இலுப்பூர் அருகே உள்ள மருதுப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி கவுசல்யா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான கவுசல்யாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு செல்வதற்கு இலுப்பூரில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆம்புலன்ஸ் கவுசல்யாவை ஏற்றிக்கொண்டு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் கவுசல்யாவுக்கு பிரசவவலி அதிகரித்தது. இதனால் நிலைமையை உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பூபதிராஜா, பைலட் தேவபாஸ்கரன் ஆகியோர் அன்னவாசல்-புதுக்கோட்டை சாலையில் திருவப்பூர் என்னும் இடத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது கவுசல்யாவுக்கு ஆழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.

108 ஆம்புலன்சில் பிரசவம்

இதேபோல் கீரனூர் அருகே உள்ள சவேரியார்பட்டினத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (34), விவசாயி. இவரது மனைவி கவுசல்யா (24) நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கீரனூர் அரசு மருத்துவமனையில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கவுசல்யாவை ஆம்புலன்சில் அழைத்துகொண்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே கவுசல்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அவசரகால மருத்துவ உதவியாளர் மஞ்சூரியா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதையடுத்து, தாயும், குழந்தையும் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தக்க நேரத்தில், 2 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


Next Story