எருது விடும் விழாவில் மாடு முட்டி வாலிபர் பலி
ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை முட்டி வாலிபர் பலியானார். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சி, சாமுடி வட்டத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை எருது விடும் விழா நடத்தப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250 காளைகள் போட்டியில் பங்கேற்றன.
கால்நடைத் துறை மருத்துவர்கள் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதித்தனர். மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், ரசிகர்கள் காளைகள் ஓடுவதை கண்டு ரசித்தனர். சீறிப்பாய்ந்த காளைகளை தடுக்க முயன்ற இளைஞர்களை காளைகள் முபட்டி தள்ளியது. இதில் 27 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாலிபர் பலி
அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 4 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அச்சமங்கலம் பழனி வட்டம் பகுதியைச் சேர்ந்த குசேலன் என்பவரது மகன் விக்ரம் (வயது 17). சென்னையில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்த இவர் சொந்த ஊரில் நடைபெற்ற எருது விடும் விழாவை பார்ப்பதற்காக வந்திருந்தார்.
மாடு ஓடி முடியும் இடத்தில் நின்று கொண்டிருந்த இவர் மாட்டின் கயிற்றில் மாட்டி கிழே விழந்து தலையில் பலத்த படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தந்தை குசேலன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் ஆறுதல்
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று இறந்தவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
எருது விடும் விழா தொடர்ந்து நடைப்பெற்றது. முதல் மற்றும் இரண்டாவது பரிசாக மோட்டார் சைக்கிள், 3-வது பரிசாக தங்க நாணயம் என மொத்தம் 50 பரிசுகள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தலைமையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 100 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எருது விடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த காளையை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி நாட்டறம்பள்ளி அருகே கல்நார்சம்பட்டி பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிட தக்கது.