பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி


பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை மின்கம்பத்தில் கட்டி வைத்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலூர்

திட்டக்குடி:

திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் கலையரசி(வயது 46). இவர், பெண்ணாடத்தில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதற்காக கோழியூர் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவரை, ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட கலையரசி, நகையை கையால் இறுக்கமாக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார்.

கட்டிவைத்து தர்ம அடி

ஒரு வாலிபர் வேகமாக பிடித்து இழுக்கவே, நகையின் ஒரு பாதி அறுந்தது. உடனே 2 பேரும் ஸ்கூட்டரில் தப்பிச் செல்ல முயன்றனர். இதனிடையே கலையரசியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்ததும் ஸ்கூட்டரை அங்கேயே போட்டுவிட்டு ஓடினர். இதில் ஒருவரை மட்டும் கிராம மக்கள் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட வாலிபரை மின் கம்பத்தில் கட்டிவைத்து கிராம மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

வாலிபர் கைது

மேலும் இது தொடர்பாக திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, அந்த வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அரியலூர் மாவட்டம் வடுகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிச்சபிள்ளை மகன் சக்திவேல்(23) என்பதும், நண்பருடன் சேர்ந்து நகை பறித்ததும் தெரியவந்தது. இது குறித்து கலையரசி கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story