தாத்தாவுடன் சைக்கிளில் சென்ற சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
கணியம்பாடி அருகே மாமாவிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற தாத்தாவுடன் சைக்கிளில் சென்ற சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பலியானான்.
பிறந்தநாள் வாழ்த்து பெற
வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ரகுராமன், பீரோ கடை வைத்துள்ளார். இவரது மகன்கள் திலீப்பன் (வயது 10), குகன் (8). இவர்கள் அதேப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திலீப்பன் 4-ம் வகுப்பும், குகன் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்தநிலையில், குகனுக்கு நேற்று முன்தினம் 8-வது பிறந்த நாள். இதனால், கனிகனியானில் உள்ள சிறுவர்களை தாத்தா தனபால் வீட்டுக்கு ரகுராமன் கொண்டுச்சென்று விட்டுள்ளார்.
அல்லிவரத்தில் உள்ள தாய்மாமாவிடம் வாழ்த்து பெறுவதற்காக தனபால், தனது பேரன்கள் திலீப்பன், குகன் ஆகியோரை சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். சாத்துப்பாளையம் அடுத்த ஊசூரான் கோட்டைமேடு பகுதியில் சென்றபோது, இவர்களுக்கு பின்னாடி வந்த லாரி, சைக்கிள் மீது மோதியது.
லாரி சக்கரத்தில் சிக்கி பலி
அதில், இடது புறத்தில் தனபால் கீழே விழுந்து லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், திலீப்பனும் சைக்கிளில் இருந்து கீழே குதித்து தப்பிவிட்டான். ஆனால், குகன் கீழே விழுந்தபோது லாரியின் பின்பக்க சக்கரம் அவனது தலைமீது ஏறி இறங்கியது. இதில், குகன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
உடனே டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்ததும், வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தனபால் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாளில் விபத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் நெல்வாய் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.