ராட்சத லாரி மோதியதில் மரக்கிளை முறிந்து அரசு பஸ் மீது விழுந்தது
முந்தி செல்ல முயன்றபோது, ராட்சத லாரி மோதியதில் மரக்கிளை முறிந்து அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கொள்ளிடம் டோல்கேட், செப்.18-
முந்தி செல்ல முயன்றபோது, ராட்சத லாரி மோதியதில் மரக்கிளை முறிந்து அரசு பஸ் மீது விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ராட்சத லாரி
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து மணப்பாளையம் நோக்கி அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுக்கொண்டிருந்தது. திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிலையாத்தி என்ற இடத்தில் பஸ் சென்றபோது அதே திசையில் நாமக்கல் நோக்கி வந்த ராட்சத லாரி (கண்டெய்னர் லாரி) பஸ்சை முந்த முயன்றது.
அப்போது சாலை ஓரத்தில் இருந்த மரக்கிளையில் லாரியின் சரக்கு பெட்டி மோதியதில் மரக்கிளை முறிந்து பஸ்சின் மேல் விழுந்தது. இதனால் பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் பதற்றத்தில் அலறியடித்து வெளி ஓடி வந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.இது குறித்த தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.