உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு


உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு
x

செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தஞ்சாவூர்

காவிரி ஆற்றிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் திருச்சி வழியாக வாழவந்தான்கோட்டை ஏரியை வந்தடைகிறது. அந்த ஏரி நிரம்பி அங்கிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலம் சுரக்குடிப்பட்டி ஏரி, தேவராயன் ஏரி, நவலூர் ஏரி, ஓலமுத்து ஏரி, நெப்பி ஏரி, வெண்டையம்பட்டி ஏரி, வெட்டி ஏரி, காமத்து ஏரி, ஓடை ஏரி என 20-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரிகள் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 50 மீ்ட்டர் நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி காட்டுவாரி மூலம் சோளகம்பட்டி வழியாக வெண்ணாறுக்கு செல்கிறது. இதனால் மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

நடவடிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் கண்ணன் கூறியதாவது:-வாழவந்தான்கோட்டை ஏரியில் தண்ணீர் நிரம்பி அதிலிருந்து சுமார் 20 ஏரிகள் சங்கிலித் தொடர் போன்று நிரம்புவது வழக்கம். தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் அனைத்தும் வீணாகி காட்டுவாரி வழியாக வெண்ணாற்றில் கலக்கிறது.

இதனை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டாலும் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க இயலவில்லை. ஆகவே, இந்த வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீரமைத்து அப்பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story