சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்-நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது


சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்-நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது
x

சேலம் மாவட்டத்தில் 54 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நாளைமறுநாள் தொடங்கப்படுகிறது.

சேலம்

காலை உணவு திட்டம்

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டம் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் முதற்கட்டமாக தொடங்கப்பட உள்ளது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில், அண்ணா பிறந்தநாளான நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி சேலம் மணக்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய கூடத்தில் உணவு தயாரிக்கும் பணியை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் எத்தனை மணிக்கு உணவு தயாரித்து முடிக்கப்படும்? பள்ளிகள் தொடங்கும் நேரத்திற்கு முன்பாக வாகனங்களில் பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கும் முன்னோட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது, டவுன் தாசில்தார் செம்மலை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து நேற்று 54 பள்ளிகளுக்கு காலை உணவு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்தந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. அதை மாணவ, மாணவிகள் ருசித்து சாப்பிட்டனர்.

54 பள்ளிகளில் தொடக்கம்

சேலம் மாநகராட்சி பகுதியில் 54 பள்ளிகளில் தொடங்கப்படும் காலை உணவு வழங்கும் திட்டத்தால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். ஏழை, எளிய பெற்றோரின் பிள்ளைகள் காலையில் பசியோடு பள்ளிக்கு வரக்கூடாது என்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய எண்ணத்தின் அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாகவும், அதன்பிறகு படிப்படியாக அரசு உத்தரவுக்கு ஏற்ப பிற பள்ளிகளுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை உணவு வழங்கும் திட்டத்தில் கிச்சடி உள்பட 13 வகையான உணவுகள் தயாரித்து வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story