வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும்
வைகை ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் இந்து முன்னணியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். இக்கூட்டத்தில், சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர்.
அதில், கடமலை-மயிலை ஒன்றிய பகுதியில் செங்கல் சூளை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும், செங்கல் சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
வைகை ஆற்றில் பாலம்
இந்து முன்னணி தேனி ஒன்றிய பொதுச்செயலாளர் குமார், நகர தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், சங்ககோணாம்பட்டி கிராமத்தில் வைகை ஆற்றின் மறுகரையில் மயானம், விவசாய நிலம் உள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது, இறந்தவர்களின் உடலை நீரில் நீந்திச் சென்று அடக்கம் செய்யும் நிலைமை உள்ளது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கல்குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.