நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற அரசு பஸ்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு பஸ் பழுது
நெல்லையின் அடையாளமாக திகழும் ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரகணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வழக்கம்போல் நேற்று மாலையில் ஈரடுக்கு மேம்பாலம் பரபரப்பாக காணப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது.
அந்த பஸ் நெல்லை சந்திப்பு ஈரோடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் எங்கும் நகர முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
போக்குவரத்து பாதிப்பு
ஈரடுக்கு மேம்பாலம் முதல் கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை மேம்பாலம் வரை ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்றனர். அவர்கள் பழுதான அரசு பஸ்சை பாலத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் முடியாததால் சில வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பழுதை சரிசெய்ய மெக்கானிக் வரவழைக்கப்பட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்டு அரசு பஸ் மேம்பாலத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.