ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த காளை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகுந்த காளை
வத்தலக்குண்டு அண்ணா நகரை சேர்ந்தவர் ரத்தினம். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். அதோடு ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்க்கிறார். இவர் வளர்த்து வந்த ஒரு ஜல்லிக்கட்டு காளை நேற்று திடீரென கயிற்றை அவிழ்த்துக்கொண்டு கொட்டகையில் இருந்து வெளியேறி நெடுஞ்சாலையில் ஓடியது. இதனை பார்த்த பொதுமக்கள் மிரண்டு அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த காளை யாரும் எதிர்பாராத வகையில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் புகுந்தது.
அதைப்பார்த்து அச்சமடைந்த அலுவலர்கள் அலறியடித்தபடி மற்றொரு அறைக்குள் ஓடிச்சென்று கதவை பூட்டிக்கொண்டனர். பின்னர் காளையின் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே மிரட்சியடைந்த காளை அலுவலகத்துக்குள் அங்கும், இங்கும் ஓடியது. இதனை பார்ப்பதற்காக அப்பகுதியில் இருந்தவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். சுமார் அரை மணி நேரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர்களை மிரள வைத்த ஜல்லிக்கட்டு காளையை அதன் உரிமையாளர் மற்றும் சிலர் வந்து பிடித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.