குண்டும்-குழியுமான சாலை
திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவாரூர்
திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை உள்ள சாலை தேசிய நெடுஞ்சாலையாக இருந்து வருகிறது. தஞ்சை-நாகை செல்லும் பிரதான சாலை என்பதால் தினமும் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த சாலை பல இடங்களில் மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கின்றன. இந்த சாலையின் வழியாகத்தான் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் என அனைத்து துறை அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
சீரமைக்கப்படுமா?
மேலும், இந்த சாலை வழியாக பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். பணி நிமித்தமாக மேற்கண்ட அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பலரும் இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அவ்வாறு அவர்கள் செல்லும்போது குண்டும்-குழியுமான சாலையில் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
அதேபோல அரசுத்துறை அலுவலர்களும் இந்த சாலை வழியாகத் தான் செல்கின்றனர். இருந்தபோதிலும் இந்த சாலையை சீரமைக்க யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தாசில்தார் அலுவலகம் முதல் கலெக்டர் அலுவலகம் வரை பழுதடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story