ஜாமீனில் வந்த பஸ் டிரைவர் வெட்டிக்கொலை
செய்யாறு அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தனியார் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூசி
செய்யாறு அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தனியார் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறுமியின் தந்தை உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பலாத்கார வழக்கில் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாண்டியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 33), தனியார் பஸ் டிரைவர்.
இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முருகன் தனது உறவினரின் மகளான 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெட்டிக்கொலை
கடந்த 23-ந் தேதி முருகன் ஜாமீனில் வெளியில் வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் முருகன் தனது வீட்டின் பின்புறம் உள்ள தைல மரத்தோப்புக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை, அவரது சகோதரர் மற்றும் உறவினர் ஒருவர் சேர்ந்து முருகனை கத்தியால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை பொதுமக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூசி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.