குடியிருப்புக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசம்:ஆடுகள், மாட்டை வேட்டையாடிய புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டதுகுமரி வனத்துறையினர் நடவடிக்கை
பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து தொடர்ந்து ஆடுகள், மாட்டை வேட்டையாடிய புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
குலசேகரம்:
பேச்சிப்பாறை அருகே குடியிருப்புக்குள் புகுந்து தொடர்ந்து ஆடுகள், மாட்டை வேட்டையாடிய புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்தது.
புலி அட்டகாசம்
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள சிற்றாறு மற்றும் மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலி கடந்த 5-ந் தேதி முதல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
2 ஆடுகள், மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கடித்துக் கொன்றது. மேலும் ஒரு மாட்டை கடித்து குதறியது. இதனால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மற்றும் ரப்பர் கழக தோட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். எந்த நேரத்தில் புலி வந்து தாக்குமோ? என்ற அச்சத்தில் தினமும் இருந்து வருகிறார்கள். ஒரே நாளில் மாட்டை கொன்றும், நாயை கவ்வியபடியும் புலி சென்றதால் மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியது.
வனத்துறையினர் ஆய்வு
ஏற்கனவே புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் வனத்துறையினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் புலியை பிடிக்க சில விதிமுறைகள் உள்ளன என கூறி காலம் கடத்தி வந்தனர்.
அதே சமயத்தில் புலி அட்டகாசத்தில் ஈடுபடும் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை வைத்து தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் வனத்துறையினரும் அங்கு முகாமிட்டு புலி அச்சுறுத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் குடியிருப்புக்குள் புகுந்து தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
இதனால் நேற்றுமுன்தினம் புலி நடமாடும் பகுதிகளை திருநெல்வேலி மண்டல வன பாதுகாவலர் மாரிமுத்து மற்றும் குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் கால்நடைகளை பறிகொடுத்தவர்களையும் சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர்.
கூண்டு வைக்கப்பட்டது
இந்தநிலையில் புலியின் அட்டகாசத்தை கட்டுக்குள் கொண்டு வர கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வனத்துறை எடுத்தது. அதன்படி நேற்றுமுன்தினம் இரவு மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பில் கூண்டு வைக்கப்பட்டது.
புலியின் நடமாட்டம் சிற்றாறு மற்றும் மூக்கறைக்கல் பழங்குடியின குடியிருப்பு என 3 கி.மீ. சுற்றளவுக்குள் இருந்து வருகிறது. எனவே அந்த பகுதியில் கூண்டு வைத்துள்ளோம். விரைவில் புலி கூண்டில் சிக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனம் சூழ்ந்த பகுதிகளான சிற்றாறு ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு, மைலாறு குடியிருப்பு மற்றும் மூக்கறைக்கல் பழங்குடியினர் குடியிருப்பு போன்ற பகுதிகளில் முன்பு யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. ஆனால் தற்போது புலி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. 12 நாட்களுக்கு பிறகு புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு இது ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.