மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கிட மனுக்கள் பெறும் முகாம்
பெரியதாழையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தாலுகாவில் 721 பேர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடும் பொருட்டு மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது.
சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.