விண்ணப்பம் பதிவு செய்ய ரேஷன்கடை அருகில் முகாம் அமைக்க வேண்டும்


விண்ணப்பம் பதிவு செய்ய ரேஷன்கடை அருகில் முகாம் அமைக்க வேண்டும்
x

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடர்பாக விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் ரேஷன்கடை அருகில் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக அரசின் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறும் வகையில் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டும்.

முகாம்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். முகாம் நடைபெறும் இடம் ரேஷன் கடைகளுக்கு அருகில் உள்ளவாறு தேர்வு செய்ய வேண்டும்.

தன்னார்வலர்கள்

இத்திட்டத்தில் பயனடைய உள்ள குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பபடிவம் ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். அடுத்த கட்டமாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி அளிக்கும் விதமாக நாளை (புதன்கிழமை) அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

விண்ணப்ப பதிவு முகாம்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு வங்கி கணக்குகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏற்பாடு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய பயனாளிகளுக்கு உதவும் வகையில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களை ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story