டயர் வெடித்து அரசு பஸ் மீது மோதிய கார்; அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் படுகாயம்
கொடைரோடு அருகே டயர் வெடித்து அரசு பஸ் மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). அவருடைய தம்பி பாலமுருகன் (21). இவரது நண்பர்கள் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த நவீன் (19), மதுரை அனுப்பானடியை சேர்ந்த விஷ்வா (20). இன்று இவர்கள் 4 பேரும், பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அந்த காரை மதுரை தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (19) என்பவர் ஓட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பள்ளப்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் வந்தபோது, காரின் டயர் திடீரென்று வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தறிகெட்டு ஓடியது. ஒருகட்டத்தில் சாலையின் மறுபுறம் பாய்ந்த கார், அந்த வழியாக திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த மணிகண்டன், பாலமுருகன், நவீன், விஷ்வா, இஸ்மாயில் ஆகிய 5 பேரும் காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.