கார் டிரைவரை அடித்துக்கொன்று உடலை எரித்தது ஏன்?; கைதான உறவினர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்


கார் டிரைவரை அடித்துக்கொன்று உடலை எரித்தது ஏன்?; கைதான உறவினர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 23 Aug 2023 2:30 AM IST (Updated: 23 Aug 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஒட்டன்சத்திரம் அருகே கார் டிரைவரை அடித்துக்கொன்று உடலை எரித்தது ஏன்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட அவரது உறவினர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கார் டிரைவரை அடித்துக்கொன்று உடலை எரித்தது ஏன்? என்பது குறித்து கைது செய்யப்பட்ட அவரது உறவினர் உள்பட 6 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

கார் டிரைவர் கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சுரேஷ் (வயது 30). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 18-ந்தேதி சுரேஷ் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அன்றைய தினம் இரவு அவரது உடலை உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச்சென்று எரித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன், ஒட்டன்சத்திரம் துணை சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அம்பிளிக்கை சென்று சுரேஷ் சாவு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சுரேசின் எரிந்த உடலின் சாம்பலை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுரேசின் உறவினரான அதே ஊரை சேர்ந்த வடிவேல் (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 5 பேர் சேர்ந்து சுரேசை அடித்து கொன்றுவிட்டு, உடலை எரித்தது தெரியவந்தது.

இதையடுத்து வடிவேலை கடந்த 20-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பணம் கையாடல்

இந்தநிலையில் வடிவேல் கொடுத்த தகவலின்பேரில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அம்பிளிக்கையை சேர்ந்த மனோகரன் (49), பாண்டி (37), தேனி சில்வார்பட்டியை சேர்ந்த சிவஞானம் (58), நிலக்கோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (29), திருப்பூரை சேர்ந்த முத்துக்குமார் (23) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வடிவேல் உள்பட 6 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

சுரேஷ் வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக மட்டுமின்றி, பணம் வசூல் செய்யும் பணியையும் செய்து வந்தார். அதே நிறுவனத்தில் வடிவேல், மனோகரன், பாண்டி ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நிறுவனத்துக்கு சேர வேண்டிய ரூ.6 லட்சத்தை சுரேஷ் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அறிந்த வடிவேல், சுரேஷ் குறித்து விசாரித்தார். அப்போது அவர் தென்காசியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வடிவேல் தென்காசிக்கு சென்று, சுரேசை கடந்த 17-ந்தேதி அம்பிளிக்கைக்கு அழைத்து வந்தார்.

தற்கொலை நாடகம்

பின்னர் அவரிடம் கையாடல் செய்த பணத்தை திருப்பி தருமாறு வடிவேல் கூறினார். அப்போது அவர் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை மட்டும் கொடுத்தார். இதனால் மீதி பணத்தை கேட்டு வடிவேல், மனோகரன், பாண்டி மற்றும் வடிவேலின் உறவினர்களான சிவஞானம், முத்துக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து சுரேசை தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர் அவரை கொலை செய்ததை மறைப்பதற்காக சுரேசின் உறவினர்களிடம், அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியுள்ளனர். அதன்பிறகு அன்றைய தினம் இரவில் வடிவேல் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சுரேசின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்று எரித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story