ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது;வாலிபர் பலி


ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் கார் பாய்ந்தது;வாலிபர் பலி
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் கார் பாய்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் கார் பாய்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெயர் வைக்கும் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் ஊட்டி தலையாட்டுமந்து அடுத்த முத்தநாடுமந்துவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இவரின் மனைவிக்கு 4-வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக குழந்தையின் தாய் குழந்தையை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

15 அடி பள்ளத்தில் பாய்ந்தது

இதுகுறித்து நவீன் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் குழந்தையை பார்ப்பதற்காக காரில் அவசரமாக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தார். காக்கா தோப்பு பாரதியார் நகர் பகுதியில் சென்றபோது கார் நிலை தடுமாறியதோடு கட்டுப்பாட்டை இழந்து 15 அடி பள்ளத்தில் பாயந்ததோடு உருண்டு கவிழ்ந்தது. மேலும் அங்குள்ள வீட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த புது மந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை பார்ப்பதற்காக வந்த போது விபத்தில் சிக்கி தந்தை உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story