சுங்கச்சாவடி தடுப்பை உடைத்துவிட்டு போதை பொருளுடன் தப்பிய கார் சிக்கியது
பள்ளிகொண்டா அருகே சுங்கச்சாவடியில் போதை பொருள் கடத்தி வந்த காரை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது மோதுவதுபோல் வந்த கார் சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து தப்பியது.
பள்ளிகொண்டா அருகே சுங்கச்சாவடியில் போதை பொருள் கடத்தி வந்த காரை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது மோதுவதுபோல் வந்த கார் சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து தப்பியது. அந்த காரை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
போதைப்பொருள்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் கடந்த நான்கு நாட்களாக குட்கா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து சென்னை சவுகார்பேட்டைக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து ேபாலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
விடிய விடிய நடத்திய வாகன தணிக்கையில் அதிகாலை 4 மணியளவில் வெள்ளை நிற கார் ஒன்று அதிவேகத்தில் சுங்கச்சாவடியை நெருங்கிக்கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.
சுங்கச்சாவடி தடுப்பை உடைத்த கார்
உடனடியாக இன்ஸ்பெக்டர் கருணாகரன், போலீசார் மணிவண்ணன் அன்பு ஆகியோர் 20 மீட்டர் தொலைவில் நடுரோட்டில் நின்று கொண்டு காரை மடக்க தயாராகினர். கார் போலீசார் மீது மோதுவதுபோல் அதிவேகமாக வந்து சுங்கச்சாவடி உள்ளே நுழைந்தது. போலீசார் மயிரிழையில் உயிர்தப்பிய நிலையில் கார், சுங்கச்சாவடியில் தானியங்கி முறையில் செயல்படும் தடுப்பை உடைத்து நொறுக்கிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பிக்க வேகமாக சென்றது.
துரிதமாக செயல்பட்ட போலீசார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப்பில் காரை பின் தொடர்ந்தனர். விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்படவே அவர்களும் விரிஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் காரைப் பிடிப்பதற்காக காத்திருந்தனர்.
ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்று வேலூர் விமான நிலையம் வழிக்கு செல்லும் சாலையில் புகுந்தது. கார் எந்த திசையில் சென்றது என தெரியாமல் போலீசார் குழப்பம் அடைந்தனர்.
மடக்கினர்
இந்த நிலையில் கார் இலவம்பாடியை அடுத்து கம்மவார் பாளையம் கிராமம் அருகே சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. காலை 6 மணிக்கு மேல் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கார் டிரைவரிடம் விசாரித்தனர். சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரிஞ்சிபுரம் மற்றும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களை மடக்கிப்பிடித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் காரை சோதனை செய்தபோது 40 மூட்டைகளில் ஒரு டன் எடைகொண்ட குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்ததில் குஜராத் மாநிலம் புராபூரி விருநா என்ற பகுதியை சேர்ந்த கோஸ்வாமி என்பவரது மகன் முகேஷ் பூரி (வயது 25), ராஜஸ்தான் மாநிலம் ராணி வாடா பகுதியைச் சேர்ந்த நம்பி ராம் சாரா என்பவர் மகன் கரண் என்ற வர்சிராம் (25) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும் இவர்கள் கடத்தி வந்த போதைப்பொருட்கள் மதிப்பு ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.