கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி


கார்பன் இல்லாத நாடாக  இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி
x

2070-ம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி பேசினார்.

வேலூர்

2070-ம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி பேசினார்.

தேசிய அளவிலான கருத்தரங்கம்

காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 'ஐசி எந்திரங்கள் மற்றும் எரிபொருள்' தொடர்பான 27-வது தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கத்திற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசினார். அப்போது ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாக பிரிவுகளை உள்ளடக்கிய தொழில்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் இந்தியா மிகப்பெரிய இடம் பிடித்துள்ளது.

வாகன தொழில்கள் விரிவாக்கத்துக்கு முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. இப்போது, நாட்டில் மின்சார வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 150 சி.சி.க்கு குறைவாக உள்ள இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக பயன்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் கார்பன் தடயத்தை குறைப்பதற்கு, நிலையான எரிபொருள்கள் அல்லது மாற்று எரிபொருட்கள் தேவை மற்றும் ஆராய்ச்சிகள் அவசியமாக உள்ளது. சமூகத்திற்கு நன்மை பயக்கும் இது போன்ற அதிநவீன ஆராய்ச்சிகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்றார்.

சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இயக்குனர் ஜெனரல் கலைச்செல்வி கலந்து கொண்டு சிறப்பு மலரை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கார்பன் இல்லாத நாடாக

நாட்டில் எல்லாவற்றிலும் மாற்றங்கள் நடந்து வருகிறது. அதிலும், தொழில்நுட்பம், எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றிலும், தொலைநோக்குடனான மாற்றங்கள் தேவை. பசுமை ஆற்றல், மின்சார ஆற்றல் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் இல்லாத நாடாக, இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அடுத்த தலைமுறையினருக்கு உணவு, நீர், எரிசக்தி, சுகாதாரம், திட்டமிடல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றை அளிப்பதில், நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். மேலும், நாட்டில் சோலார் மற்றும் காற்றாலை மின்சார பயன்பாடு முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்கள் எல்லாவற்றையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். குறிப்பாக, எதற்காகவும் வெளிநாடுகளை எதிர்பார்க்காமல், நமக்கு தேவையானவற்றுக்கு, தன்னிறைவுடன் இயற்கைக்கு உகந்த முறையில் உற்பத்தி இருக்க வேண்டும். இதுதான் நம் இலக்காக இருப்பதோடு, அதை நோக்கி தான் செயல்பாடுகளும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் காணொளி காட்சி மூலமாக கலந்து கொண்டு பேசினார். கவுரவ விருந்தினராக, ஜெர்மனி இசட்.எப். முதுநிலை துணைத்தலைவர் கிறிஸ்டியன் பிரெனிக்கி, சி.ஐ.ஐ.எஸ். செயலாளர் பிரதீப்குமார் பாண்டே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

வி.ஐ.டி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், துணை வேந்தர் ராம்பாபு கோடாளி, பதிவாளர் ஜெயபாரதி மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story