மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பலி
குளித்தலையில் ேமாட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சரக்கு வேன் மோதல்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்கலாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 57). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இவர் கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை பெரியபாலம் அருகே உள்ள மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த சரக்கு வேன் ெசல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வராஜ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மீண்டும் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.