முதியவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்கு
முதியவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சலூன் கடைக்காரர்
கரூர் கந்தபொடிகார தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 68)். இவர் அப்பகுதியில் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சலூன் கடைக்கு வந்த புலியூர் புரவிபாளையம் சேர்ந்த சரவணன் என்பவர் கணேசனிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.
அப்போது சரவணன், ஆனந்த் என்பவரை கணேசனுக்கு அறிமுகம் செய்து வைத்து, தனது நண்பர் எனவும், அவர் அவரால் அரசு வேலை வாங்கி தர முடியும் என கூறியுள்ளார்.
ரூ.3½ லட்சம் மோசடி
இதனையடுத்து கணேசன் தனது மருமகனுக்கு அரசு வேலை வாங்கித்தரமறுமாறு கூறி சரவணன், ஆனந்த் ஆகியோரிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட 2 பேரும் இதுவரை எந்த அரசு வேலையும் வாங்கி தாராமல் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை மோசடி செய்தது கணேசனுக்கு தெரியவந்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த கணேசன் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சரவணன், ஆனந்த் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.