தந்தை பெற்ற கடனுக்காக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
தந்தை பெற்ற கடனுக்காக வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தரகம்பட்டி அருகே உள்ள குருணியூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமரவேல் (வயது 34). இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆண்டியப்பன் என்பவரிடம் ராஜேந்திரன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை கடனாக பெற்று உள்ளார். இதற்காக மாதம் ரூ.5 ஆயிரத்து 400-ஐ மாத தவணையாக ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக கட்டி வந்துள்ளார். இந்தநிலையில் பணம் கொடுத்த ஆண்டியப்பன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதையடுத்து ஆண்டியப்பன் மகன் அண்ணாத்துரை (27) என்பவர் தனது தந்தை கடனாக கொடுத்த தொகையை ராஜேந்திரனிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் ராஜேந்திரன் வீட்டிற்கு அண்ணாத்துரை அவரது தரப்பை சேர்ந்த பிச்சைமணி, இளஞ்சியம், அம்பிகா ஆகிய 4 பேரும் சென்றனர்.
அப்போது அங்கிருந்த குமரவேலுடன், அவரது தந்தை பெற்ற கடனை திரும்பி கேட்டு தகராறு செய்து, தகாத வார்த்தையால் திட்டி அவரை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த குமரவேல் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் பாலவிடுதி போலீசார் அண்ணாதுரை, பிச்சைமணி, இளஞ்சியம், அம்பிகா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.