விதியை மீறி கட்டிடம் கட்டிய 41 பேர் மீது வழக்கு
திண்டுக்கல்லில் விதியை மீறி கட்டிடம் கட்டிய 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் வீடுகள், கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சியின் நகரமைப்பு பிரிவில் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மேலும் அனுமதி பெற்ற பின்னர், அனுமதித்த அளவு மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும். ஆனால் ஒருசிலர் அனுமதி பெற்ற அளவை தாண்டி விதிகளை மீறி கட்டிடம் கட்டுகின்றனர். அதுபோன்ற கட்டிடங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கடந்த சில நாட்களாக நகர் முழுவதும் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் கோவிந்தாபுரம், ரவுண்டுரோடு, நாகல்நகர், பாரதிபுரம், ரதவீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வில் ஈடுபட்டனர்.
அதில் பல்வேறு இடங்களில் விதியை மீறி அனுமதித்த அளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டியதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 41 கட்டிட உரிமையாளர்கள் மீது நகரமைப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.