பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 5 பேர் மீது வழக்கு
பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேஷ். இவருடைய மனைவி சித்ரா(வயது 48). இவர் சென்னை, மதுரை, புதுச்சேரியில் கல்வி அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது அறக்கட்டளை குறித்து சிலர் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து சித்ரா அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கடந்த ஜூன் மாதம் சித்ராவை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல், அவரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதோடு, அவரது மகளின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து அனுப்பி உள்ளனர். இது குறித்து சித்ரா கண்டோன்மெண்ட் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மதுரை மெயின்ரோடு கைகாட்டியை சேர்ந்த லூயிஸ் புஷ்பராஜ், சூசைமேரி, சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஜெனிபர்தனம், லண்டனை சேர்ந்த ராஜா, மதுரை அண்ணாநகரை சேர்ந்த நிர்மலா ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.