அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் எருது விட்ட 7 பேர் மீது வழக்கு


அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் எருது விட்ட 7 பேர் மீது வழக்கு
x

சுந்தரம்பள்ளியில் அனுமதித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் எருது விட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரை அடுத்த சுந்தரம்பள்ளி ஊராட்சியில் நேற்று முன்தினம் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் 400 காளைகள் பங்கேற்று ஓடியது. மதியம் 2 மணி வரை மட்டுமே எருது விடும் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2 மணி அளவில் எருது விடும் திருவிழாவை முடித்துக் கொள்ள போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கூறினார்கள். ஆனால் விழாக் குழுவினர் விதிகளை மீறி மாலை 4.45 மணி வரை விழா நடத்தினர்.

பலமுறை விழா குழுவினரிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கூறியும் எருதுகளை விட்டுக் கொண்டே இருந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நித்திய கல்யாணி கந்திலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் விழாவை முடிக்காமல், அதிகாரிகளை பணி செய்யாமல் தடுத்ததாக கூறியிருந்தார். அதன்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கருணாநிதி, அழகேசன், ராஜசேகர், மணி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story