முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
முதியவரை தாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 65). இவர் அப்பகுதியில் நாட்டாராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் மாரியம்மன் கோவில்கள் அருகில் பணி செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் அப்பகுதி வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் கோவில் கணக்கு வழக்குகளை கொடுக்காமல், ஏன் கோவில் வேலைகளை செய்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டு அருகில் இருந்த கருங்கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மகாலிங்கம் தலையில் பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் தகராறில் ஈடுபட்ட பூமிநாதனை தடுத்து மகாலிங்கத்தை மீட்டுள்ளனர். அப்போது பூமிநாதன் மகாலிங்கத்தை மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மகாலிங்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மகாலிங்கம் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.