விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய சிறுவன் மீது வழக்கு


விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய சிறுவன் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிய 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

7 பேர் படுகாயம்

குலசேகரத்தை அடுத்த வலியாற்று முகத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). இவருடைய மனைவி சித்ரா (32). மாற்றுத்திறனாளி. இவர்கள் புலியிறங்கியில் வாடகை வீட்டில் குடியிருந்து வீட்டின் முன்பு தள்ளுவண்டியில் கூழ், மோர் மற்றும் பலகாரம் வியாபாரம் செய்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் மதியம் பிரகாஷ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு கார் டிரைவருடைய கட்டுப்பாட்டை இழந்து தள்ளுவண்டி மீது மோதியது. இதில் பிரகாஷ், கூழ் குடித்துக் கொண்டிருந்த ரெனால்டு ஜெபா (29) மற்றும் காரில் வந்தவர்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் குலசேகரம், மார்த்தாண்டம், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சிறுவன் ஓட்டியதாக புகார்

இது விபத்து தொடர்பாக காயமடைந்த ரெனால்டு ஜெபா திருவட்டார் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், காரில் நம்பர் பிளேட் இல்லை என்றும், காரை குளச்சலை சேர்ந்த 17 வயது சிறுவன் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து மோதியதாக கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் காரில் இருந்தவர்கள் காரை ஓட்டியது வினீத் (25) என்று கூறுகிறார்கள். எனவே, காரை ஓட்டியவரை கண்டறிவதற்காக இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் மற்றும் போலீசார் குலசேகரத்தில் இருந்து புலியிறங்கி வரையுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story