போலி இருட்டு கடை அல்வா விற்றவர் மீது வழக்கு


போலி இருட்டு கடை அல்வா விற்றவர் மீது வழக்கு
x

நெல்லையில் போலி இருட்டு கடை அல்வா விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

'திருநெல்வேலி அல்வா' உலக புகழ் பெற்றது ஆகும். நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பல்வேறு இனிப்பு கடைக்காரர்கள், தங்களது நிறுவனம் சார்ந்த அல்வா தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அவை பல்வேறு பெயர்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருகிறார்கள். அவர்கள் ஆன்மிக சுற்றுலாவாக நெல்லைக்கும் வருகிறார்கள். அப்போது நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருக்கும் இனிப்பு கடைகளில் அல்வா வாங்குவதற்கு அலைமோதுகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்பில் 'திருநெல்வேலி இருட்டு கடை அல்வா' என்ற பெயரில் அல்வா விற்பனை செய்து உள்ளனர். இதற்கு நெல்லை டவுன் கிழக்கு ரதவீதி இருட்டு கடை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக அந்த கடையின் நிர்வாக பங்குதாரர் கவிதா (வயது 46) நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தங்களது வர்த்தக முத்திரை பெயரை போலியாக பயன்படுத்தி அல்வா விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதுதொடர்பாக நெல்லை சந்திப்பை சேர்ந்த ஒரு இனிப்பு கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story