ஏழைகளுக்கு வழங்கிய நிலம் மோசடி செய்ததாக வழக்கு
ஏழைகளுக்கு வழங்கிய நிலம் மோசடி செய்ததாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தேவசகாயம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை தல்லாகுளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை ஏழை பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பயன்படுத்த தனியார் அறக்கட்டளையிடம் அரசு ஒப்படைத்தது.
ஆனால் அந்த இடத்தை சட்டவிரோதமாக கிரையம் செய்து, அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாயை தனிநபர்கள் மோசடி செய்துள்ளனர். இதனால் ஏழைகள் பயன்பெறும் நோக்கத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் வீணாகிவிட்டன. இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
அரசின் நோக்கம் திசைமாறியதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலங்களை மீட்க வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கோர்ட்டு அரசு நில மோசடி விவகாரத்தில் தலையிட்டு, நிலங்களை மீட்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பு, எதிர்தரப்பினர் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.