பிரபல ரவுடி கொலை வழக்கு; 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
திண்டுக்கல் பிரபல ரவுடி கொலை வழக்கில் கைதான 4 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி பட்டறை சரவணன் (வயது 35). கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி, இவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அல்ஆசிக் (29) உள்பட 10 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர் அல்ஆசிக் உள்ளிட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இதே கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் ராஜலட்சுமி நகரை சேர்ந்த மகேஸ்வரன் (21), பேகம்பூர் அரசனபுரத்தை சேர்ந்த கலீல் அகமது (20), நத்தர்ஷா தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா (25), புலவர் தெருவை சேர்ந்த முகம்மது தாரிக் அன்வர் (24) ஆகியோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டர் பூங்கொடியிடம் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மகேஸ்வரன் உள்பட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.